Monday, March 30, 2009

வன்னி மக்களைப் பாதுகாக்கவேண்டுமென்ற தேவைப்பாடு அரசிற்குண்டா?


தாரா சிறீராம்

வன்னியில் இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான வன்னி மக்களின் உண்மைநிலையினை கண்டறியும்பொருட்டு நாங்கள் அப்பிரதேசங்களில் சமூகசேவையில் ஈடுபடுபவர்களையும், மதகுருமார்கள், மனிதஉரிமை ஆணைக்குழுவின் அலுவலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தோம். எமது சுற்றுப்பயணத்தின்போது கிடைத்த தகவல்களின்படி வன்னி மக்களின் வாழ்க்கை பின்வருமாறு அமைகின்றது.

யுத்தக் காரணங்களினால் இற்றைக்கு வன்னியிலுள்ள மொத்த சனத்தொகையாகிய 419000; பேரில் இடம்பெயர்ந்துள்ளோர் 315000 பேர் ஆவர், இவர்களில் அதிகமானோர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர் என்பதுடன் அரசினால் பாதுகாப்பு வலயமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விஸ்வமடு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் தங்கியுள்ளனர். அரசு இவ்வாறு சூனியப்பிரதேசங்களாகக் குறிப்பிட்டுள்ள இடப்பரப்பு 10 கிலோமீற்றர் சதுரப்பரப்புடையதாகும். ஆனால் இடம்பெயர்ந்துள்ளோர் தொகை 315000 பேராகும். இவ்வாறான ஒரு எண்ணிக்கைக்கு இவ் 10கிலோமீற்றர் சதுரப்பரப்பு போதுமானதா என்பது ஒரு பிரச்சனையாகும். எமது கருத்துப்படி இது எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பதாகும்.

இன்னுமொரு பிரச்சனை பல்வேறு மக்கள் இந்த சூனியப்பிரதேசமாக கருதப்படும் பிரதேசத்தினுள் நுழையாமல், இவர்கள் யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களினுள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதற்குக்காரணம் இப்பிரதேசங்கள் சூனியப்பிரதேசமாகக் கருதப்பட்டிருந்தாலும், இதற்குமுன் சூனியப்பிரதேசங்களாகக் கருதப்பட்ட பேசாளை மற்றும் மடு தேவாலயம் ஆகியன சூனியப்பிரதேசங்களாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்குரிய ஆணையாளரினால் (UNHCR) மேற்பார்வை (கண்காணிப்பு) செய்யப்பட்டவையாகும். இவ்வாறு எவராலும் கண்காணிப்புக்கு உட்படவில்லையென்பதனால் இடம்பெயர்ந்தோர் மிகவும் பயத்துடன் வாழ்கின்றனர்.

மற்றுமொரு விடயம் இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கான உணவுப்பிரச்சனையாகும். தற்போதைக்கு ஐக்கிய நாடுகளின் உணவுப்பொதிகளைக் கொண்டுசென்ற food convey இரண்டும் மற்றும் அரசமுகவர்களூடாகச் சென்ற இரண்டு food convey மாத்திரமே வன்னியைச் சென்றடைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மூன்றாவது food convey வன்னியைச் சென்றடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள உணவு மற்றும் ஏனைய பொருட்களுக்கு மேலாக வன்னியிலுள்ள குழந்தைகளுக்கு தேவையான பால்மா (குழந்தைகளுக்குரிய), பால்மா, சீனி, தேயிலை, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, நுளம்புத்திரி, மற்றும் குடிநீர் என்பவற்றில் பாரியளவிலான தட்டுப்பாடு நிலவுகின்றது. பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபாய் 1200 என்பதுடன் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை ரூபாய் 350தாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தமது உணவுகளை சமைத்துக்கொள்ளவும் முடியாதுள்ளது. தட்டுப்பாடுள்ள சில உணவுப்பொருட்களின் விலை மிக உயர்வாக இருப்பதனால் இவற்றினை இடம்பெயர்ந்துள்ள மக்களால் கொள்வனவு செய்யமுடியாதுள்ளது.

தற்பொழுது வன்னியில் மழைகாலம் ஆரம்பித்துள்ளதுடன், மக்கள் பொதுவாகவே மரநிழலிலும், காடுகளிலும், வயல்வெளிகளிலுமே தங்கியிருந்தனர். அதனால் மழை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலை மக்களை மிகவும் துன்பகரமாக நிலைக்குத் தள்ளுகின்றது. வயல்கள் நீரினால் நிரப்பப்பட்டுள்ளதனால் மக்கள் தர்மபுரமூடாக வெளியேறியுள்ளனர். இந்த தர்மபுரம் பாதையூடாக செல்லும் வாகனங்கள் மிகவேகமாக செல்வதனால் நாள்தோறும் ஏற்படும் வீதி விபத்துக்களின் தொகை அதிகரித்தவண்ணமே உள்ளது. மிகவும் வேகமாகச் சென்று வாகனத்தில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்தது. சிறிய பிரதேசத்தில் அதிக மக்கள் குடியிருக்கின்றனரென்பதைக்கூட கருத்திற்கொள்ளாது வாகனஓட்டுனர்கள் தமது வானகங்களைச் செலுத்துகின்றனர். இது தொடர்ந்து வீதி விபத்து ஏற்பட வழி செய்யும். இவர்கள் குடியிருப்பதற்கு தேவையான கூடாரங்களை அமைப்பதற்குரிய அடிப்படைப் பொருட்களைக்கூட அரசு வழங்கவில்லை. வன்னியில் ஒரு சீமேந்து பையின் விலை ரூபாய் 27000ஐ அண்டியுள்ளது.

சீமேந்தை வன்னியினுள் கொண்டுசெல்வதில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டரீதியான தடையினால் ஐக்கிய நாடுகள் அல்லது வேறு சமூகசேவை நிறுவனங்கள் இந்த மக்களுக்கு எவ்வித நிர்மாணப் பணியினையும் செய்துகொடுக்கவில்லை. இப்பிரதேசங்களிலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் ஒரு பாடசாலை மாத்திரம் தமது பணியினை மேற்கொள்கின்றது. இது காலையில் அப்பிரதேசத்தில் குடியிருக்கும் குழந்தைகளுக்கு, மாலையில் இடம்பெயர்ந்துள்ள குழந்தைகளுக்கு என கல்வியினைப் புகட்டுகின்றது. ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீதிவிபத்து காரணமாக மாலையில் நடாத்தப்பட்டுவந்த வகுப்புக்கள் (பாடசாலை) நிறுத்தப்பட்டுள்ளது. காலையில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கான பாடப்புத்தகங்கள், அப்பியாசப் புத்தகங்கள்கூட இல்லாத ஒரு நிலை நிலவுகின்றது.

மழைக்காலம் ஆரம்பித்தவுடன், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் மலேரியா, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் மிகவேகமாகப் பரவுகின்றன. காரணம் அதிகபட்சமான மழையினால் மலசலகூடக் குழிகள் நிரம்பியுள்ளதால் இக்குழிகளுக்கு மாற்றீடாக மண்ணெண்ணை பரல்களை வெட்டிப் பாவிப்பதனால், வடிந்தோடும் மழைநீரில் இந்த அழுக்குகள் சேர்வதனால் இந்நோய்கள் மிகவேகமாகப் பரவுகின்றன. இதற்கிடையில் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை முறைகள் வழமைபோல் இடம்பெற்றாலும், இங்குள்ள நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியுள்ளது. விஷேடமாக மழைகாரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான வைத்திய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லையென்பதுடன் வைத்தியஅதிகாரிகள், சுகாதார சேவைஅதிகாரிகள் எவரும் இந்த இடம்பெயர்ந்த மக்களைச் சென்று பார்வையிட முடியாதுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்குரிய மிகப்பெரிய பிரச்சனை பாம்புக்கடி. கடந்த 10 நாட்களுக்குள் வயது வந்தவர்கள், குழந்தைகளுட்பட 200க்கும் மேற்பட்டோர் பாம்புகளினால் தாக்கப்பட்டுள்ளனரென்பதுடன், சிலர் சரியான மருத்துவ வசதிகளின்றி உயிரிழந்துமுள்ளனர்.

இதேபோன்று வன்னி மக்களிடையே எவ்விதமான தொலைத்தொடர்பு சேவையும் இல்லையென்பதுடன், ஐக்கிய நாடுகள் மூலம் தமது தொடர்பாடல்களை மேற்கொள்ளவென அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு நிலையமொன்று மாத்திரமே மிகுதியாக இயங்குகின்றது. இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதற்கு வன்னியினுள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை, மக்கள் இவ்வாறானதொரு துன்பகரமாக சூழலில் இருக்கும்போதுகூட அரசு ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய சமூகசேவை அமைப்புக்களை வன்னியிலிருந்து வெளியேற்றுவதன்மூலம் இம்மக்கள் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைக்கு ஒட்டுசுட்டானிலுள்ள தமது சொந்தங்களின் வீடுகளில் சிலர் தங்கியுள்ளனர். இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடுகளில் 40க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவ்வீடுகள் தற்போது பெய்துவரும் கடும் மழைக்குக்கூட தாக்குப்பிடிக்காதவையாகும்.

தற்பொழுது வன்னி மக்கள் வறுமை, சுகாதார சீர்கேடு, தங்குமிட வசதியின்மை, இயற்கையின் நிகழ்வுகள், மரணபயம் போன்றவற்றினால் கடுமையாகத் தாக்கமடைந்துள்ளனர். சிறு குழந்தைகள் போஷாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் வாழ்வதற்குரிய பாதுகாப்பான இடம் இலங்கையில் எங்குமேயில்லை.

கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த வன்னி மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வரும்படி அரசு அழைப்பு விடுத்திருந்தது. நாம் நடத்திய ஆய்வின்படி ஐக்கிய நாடுகளின் முகவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டனர். அதாவது இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவதற்கு வவுனியாவில் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதென்பது அவர்களது கருத்தாகும். இதில் ‘மனிக் பாம்’ என்ற இடம் துப்பரவு செய்யப்பட்டிருந்ததுடன் மற்றைய இரண்டு பிரதேசமும் எவ்வித முன்னேற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. மனிக்பாம் என்ற இடத்தில் அதிகபட்சமாக 4000 பேர் மாத்திரமே தங்கக்கூடியதாக வசதிகள் இருந்தபோதும், அரச அறிவுரையின்படி 60000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கலாமென்று குறிப்பிட்டிருந்தது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தின்போது வன்னியிலிருந்து 315000 பேர் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வந்திருப்பின், ஏற்கனவே வவுனியாவில் குடியிருக்கும் 182000 பேருடன் சேர்ந்து இந்த இடம்பெயர்ந்த மக்களும் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியிருப்பர். மற்றைய விடயம் தற்பொழுது இம்மக்களிருக்கும் இடத்திலிருந்து வவுனியா மற்றும் மன்னாரிற்கு வருவதாயின் மிகவும் தூரப்பயணமொன்றை காடுகளூடாக மேற்கொள்ளவேண்டியிருக்கும். இது மிகவும் பயங்கரமான ஒரு மார்க்கமாகும். உண்மை என்னவென்றால் வன்னி மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரமாட்டார்களென்பது ஏற்கனவே அரசு அறிந்த ஒரு விடயமாகும். இது அரசின் முன்னேற்பாடுகளிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். இதனால் இன்று வன்னியிலுள்ள மக்களை பாதுகாக்கவேண்டுமென்பதில் அரசிற்கு எவ்விததேவையும் இல்லையென்பது எமது பிரச்சனையாகும்.

வன்னிப் பிரதேசம் இன்று அரசின் முக்கிய இலக்காக உள்ளதுடன், எதிர்வரும் சில வாரங்களில் நிலைமாறாதுபோனால், வன்னி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறிகாக மாற இடமுள்ளது.

Back to Home page...

1 comment:

kaka said...

i don't understand what you said.
我来自中国。