Sunday, March 29, 2009

அகதிமுகாம்கள் சிறைச்சாலைகள் போன்று காட்சியளிக்கின்றது

ருகி பிரணாந்து கொழும்பில் அமைந்துள்ள பிரபலமான மனிதஉரிமை அமைப்பாகிய Law and Society Trustஇன் இணைப்பாளராவார். மிகவும் பிரபல்யமான மனிதஉரிமைப் பாதுகாவலராகிய இவர் சில நாட்கள் பாங்கொக் நாட்டில் அமைந்துள்ள Forum Asiaவின் இணைப்பாளராகவும் கடமையாற்றினார். சில நாட்களுக்குமுன் மன்னார் பிரதேசத்தை பார்வையிட்டதன்பின் இவர் ‘சமபிம’விற்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு.

இன்று அனைவரும் யுத்தத்தைப் பற்றிபேசும்போது நீங்கள் மாத்திரம் ஏன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடச் சென்றீர்கள்?

சாதாரணமாக எமது கருத்து வட, கிழக்கு மாவட்டங்கள் ஓமந்தையிலிருந்தே பிரிய ஆரம்பிக்கின்றன என்பதாகும். இருப்பினும் எமது சுற்றுப்பயணத்தின் பின் கண்ட விஷேடமான ஒரு விடயம் யாதெனின் இப்பொழுது நாடு மதவாச்சியில் பிளவுபடுத்தப்படுகின்றதென்பதாகும். கொழும்பிலிருந்து அல்லது வேறொரு பிரதேசத்திலிருந்து வவுனியாவிற்கு அல்லது மன்னாரிற்கு செல்ல விரும்புவர்கள் மதவாச்சியிலுள்ள சோதனைச்சாவடியில் இறங்கி அதிலிருந்து வேறொரு வாகனத்தில்தான் செல்லவேண்டியுள்ளது. வவுனியாவரை சென்ற ரயில்கள் தற்பொழுது செல்வது மதவாச்சிவரைக்கும் மாத்திரமே. காலை 3.45, 7.30 மற்றும் இரவு 10.30ற்கும் மதவாச்சியிலிருந்து புறப்படும் ரயில்கள் மன்னாரிலிருந்து வரும் எவராலும் ஏற முடியாது. காரணம் மன்னார் வீதி காலை 6.00மணிக்குத்தான் திறக்கப்படுகின்றது. இந்த நேரங்கள் காலநேர அட்டவணையின் பிரகாரம் தயாரிக்கப்பட்டவை எனவே மன்னார் வாசிகளுக்கு இவற்றில் பயணிப்பதற்கு சரியான நேரத்திற்கு மதவாச்சிக்கு வரமுடியாதுள்ளது. பொருட்களைக் கொண்டுசெல்லும்போதுகூட மதவாச்சியைக் கடப்பதாயின் வேறு வாகனங்களையே ஒழுங்குபடுத்தவேண்டியள்ளது. இச்சந்தர்ப்பத்தில் வாகனங்களுக்குரிய கூலி பலமடங்குகளாக அதிகரிக்கும். இவ்வனைத்து செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டியது மன்னார் சாதாரண மக்களாகும். மற்றைய விடயம் மன்னாரில் வாழும் அனேகமக்கள் கத்தோலிக்க தமிழ் மக்களாவர். மடு மாதாவின் வருடாந்த உற்சவத்தின்போது கிழக்கிலிருந்து வந்த சிங்கள-கத்தோலிக்கர்களுக்கு மதவாச்சியிலிருந்து மன்னாரிற்கு செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு இராணுவத்தினால் உணவு வழங்கப்பட்டதுடன், பஸ்களில்; ஏற்றிச்சென்று மன்னாரில் இறக்கிவிடப்பட்டனர், மீண்டும் அங்கிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதுடன், இருப்பினும் மன்னாரிலிருந்து வந்த மக்களும் தமது பிரதேசத்திலுள்ள முக்கியமான இடத்திற்குச்செல்ல இவ்வாறானதொரு ஏற்பாடு செய்துகொடுக்கப்படவில்லை.

உங்களது கண்ணோட்டத்தில் மன்னார் மக்களின் வாழ்க்கை நிலைமை எவ்வாறுள்ளது?

இவர்களிடத்தில் காணப்படும் மிகமுக்கிய விடயம் பயமாகும். நாட்டு நிலைமையின்படி இவர்களுக்கு உதவ எவரும் இல்லையென்பது இவர்களது எண்ணமாகும். மற்றைய விடயம் மன்னாரில் தொடர்பாடல் சேவைகளிலுள்ள பின்னடைவு, மன்னாரில் அனைத்து கையடக்க தொலைபேசி அமைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்களது எண்ணம் இவை இராணுவத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதென்பதாகும். எமது சுற்றுப்பயணத்தின்போது ஒரு பொலிஸ் அதிகாரி எம்மிடம் கூறியதாவது, இராணுவம் தற்பொழுது செய்துகொண்டிருக்கும் செயற்பாடுகளுக்கு கையடக்க தொலைபேசிகளின் பாவனையினால் நட்டம் அல்லது தடங்கல்கள் ஏற்படுவதால் அவற்றினைத் துண்டித்துள்ளனரென்பதாகும்.

அதேபோன்றுதான் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்குத் தோன்றும்போதெல்லாம் பொதுமக்கள் மன்னாருக்குள் பிரவேசிப்பதை தடுக்கின்றனர்.

தற்பொழுது மன்னார் நகரத்தினுள் நிலவும் நிலைமை எவ்வாறுள்ளது?

மன்னார் நகரத்தினுள் ஊரடங்கும் சட்டம் இல்லாவிடினும்கூட இரவு 7.00 அல்லது 8.00 மணியாகும்போது மக்கள் தெருவிற்கு வருவதில்லை. கடத்தல்கள் மற்றும் கொலைச்சம்பவங்கள் இன்னமும் இடம்பெறுவதாலும், இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது தமக்கு தமிழ் மொழியில் பொலிஸில் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியாதென்பதும் அதிகாரிகள் தமக்கு வேண்டியதுபோல் முறைப்பாடுகளை எழுதிக்கொள்வதும், முறைப்பாட்டின் பிரதிக்குப் பதிலாக அதனை சுருக்கமாக எழுதி பொதுமக்களிடம் வழங்குவதனாலும் மன்னார் மக்களுக்கு தமது உயிரைப் பற்றி எவ்விதத்திலும் நம்பிக்கையில்லையென்பதுடன், உத்தரவாதமுமில்லை.

உங்களது கருத்தின்படி வடகிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்கள் இருக்கையில் மன்னாரில் மாத்திம் இவ்வாறானதொரு நிலைதோன்றக் காரணமென்ன?

முக்கியமான விடயம் போக்குவரத்துக் கஷ்டம். அரசு மன்னாரினுள்ளும் வேறு பிரதேசங்களிலிருந்தும் உள்வருகையினைத் தடைசெய்ய முயற்சி செய்கின்றது. உதாரணமாக ஐக்கிய நாடுகளின் முகவர் இடம்பெயர்ந்தோரைச் சென்று பார்வையிட முயற்சி செய்தபோது, அவர் மன்னாரினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அவரது பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்த முடியாதென அரசு குறிப்பிட்டிருந்தது.

தங்களது சுற்றுப்பயணத்தின்போது மன்னாரில் அமைக்கப்பட்டிருந்த அகதிமுகாம்களை பார்வையிட்டீர்களா? அங்கு நீங்கள் கண்டவற்றை விபரிக்க முடியுமா?

இந்த முகாம்கள் ஒருவகையான சிறைச்சாலைகளாக காட்சியளித்தன. இந்த முகாம்களிலிருந்து சிலர் வெளியேசெல்ல தடைசெய்யப்பட்டிருந்தது. சிலர் வெளியே சென்றாலும் மாலையாகுமுன் முகாமிற்குள் வரவேண்டியிருந்தது. இங்கு உள்ளவர்கள் குற்றவாளிகளல்ல. வேளாண்மை செய்துகொண்டு, மீன்பிடித் தொழில்களில் ஈடுபட்டவர்களும் கூறும் ஒரேயொருவிடயம் அவர்கள் யாரையும் நம்பி வாழவேண்டியவர்களல்ல (உணவிற்காக) என்பதாகும். 2770ல் முசலி பிரதேசம் மீட்கப்பட்டு தற்போதைக்கு ஒரு வருடம் கடந்த நிலையில் 4000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர். கடந்த வைகாசி மாதம் நானத்தன் பிரதேசத்தில் அரசபடைகள் சுவரொட்டிகளில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர், அதாவது LTTEயுடன் தொடர்புடையவர்கள் தயவுசெய்து இராணுவமுகாமிற்கு வந்து சரணடையுமாறு என்பதாகும். இதற்குமுன் LTTEயினரினால் மக்கள் கட்டாய ஆயுதபயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கும் இவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் இவ்சுவரொட்டிகளை பார்வையிட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். பலர் வைகாசி மாதத்தின்பின் இந்தியாவிற்குச் செல்ல காரணமாக அமைந்தது இச்சுவரொட்டிகளே.

LTTE அமைப்பினால் இவர்களுக்கிருந்த அச்சுறுத்தல்களென்ன? இன்னமும் அவ்வாறான பயமுறுத்தல்களைக் காணக்கூடியதாக இருக்கின்றதா?

தற்பொழுது அவ்வாறான அச்சுறுத்தல்கள் இல்லை. இருப்பினும் LTTEயினர் தமது 18 வயது பூரணமாகிய பிள்ளைகளை கட்டாயத்தின் பேரில் தமது அமைப்பில் இணைத்துக்கொண்டமையினால் இம்மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தனர். இருப்பினும் தமது பிள்ளைகளை வெளியேற்ற LTTE அமைப்பு அனுமதி வழங்கவில்லை. இதற்கான முக்கிய காரணம், அனேகபொதுமக்கள் படகுகள்மூலம் காட்டுவழியாக புல்மோட்டைப் பகுதியினூடாக, மேற்குக் கரையோரமாகிய தப்பி மன்னாரினுள் நுழைந்தனர். இதற்கும் மேலாக இரு தரப்பினரதும் யுத்தசெயற்பாடுகளினால் தமது உயிர்களைப் பாதுகாக்க சிலர் மன்னாரினுள் வர ஆரம்பித்தனர். இவ்வாறு வருபவர்களை இராணுவம் கலிமுண்டாயி மற்றும் திருக்குண்டால் போன்ற முகாம்களில் தங்கவைத்தனர். கடந்த பங்குனி மாதம் இச்செயற்பாடு ஆரம்பித்தது. தற்போதைக்கு கலிமுண்டாய் முகாமில் 500ற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். ஆனி மாதம் ஆரம்பிக்கப்பட்ட திருக்குண்டால் முகாமில் 100ற்கும் மேற்பட்டோர் வைக்கப்பட்டனர்.

இந்த முகாம்களிலுள்ள மக்கள் படையினரின் ஆதரவை நாடி வந்தவர்களா?

ஆம், மிகவும் பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதனால் வந்தவர்கள் மூன்று தொடக்கம் நான்கு வயதையடைந்த சிறுவர்கள் தொடங்கி வயதுவந்த பெரியோர்கள்கூட குடும்பங்களாக இங்கிருக்கின்றனர். இவ்வனைவரினதும் சொந்தபந்தங்கள், நண்பர்கள் கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் இருக்கின்றனர். இருப்பினும் இவர்களைக்காண இம்மக்கள் செல்ல அனுமதிக்கப்படார். தற்பொழுது இம்மக்களின் கருத்து அவர்கள் இருந்த நிலையினைவிட அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனரென்பதாகும். தொழில்நிமித்தம் முகாம்களை விட்டு வெளியேறுவதாயின் அவர்கள் பாஸ் எடுக்கவேண்டியுள்ளது. பிணையாளர் ஒருவரை முகாமில் தங்கவைக்கவேண்டும். மீனவர்கள் மாலையானதுடன் தமது படகின் என்ஜின்களை இராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும். இம்முகாம்கள் வேலி முட்கம்பிகளினால் பிற உலகிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் அரசினால் இவர்களுக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ளதா?

கலிமுண்டாய் முகாமில் அனைத்துத் தேவைப்பாடுகளும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் செய்யப்படுகின்றது. திரிக்குண்டால் முகாம் முக்கியமாக அரச கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றது. உலக உணவுத்திட்ட அமைப்புமூலம் வழங்கப்படும் உணவு அரசினால் இம்முகாமிற்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இந்த முகாமில் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 126. இவர்கள் முகாம்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இருப்பினும் உயர்தரம் கற்கும் மாணவர்கள் தங்களது சில பாடங்களை கற்பதற்காக மன்னார் அல்லது வவுனியாவிற்கு செல்லவேண்டியிருந்தாலும் அரசு இதற்கு அனுமதி வழங்குவதில்லை. நோயாளர்கள்கூட தமது மருந்துகளை எடுக்கவேண்டிய சந்தர்ப்பத்தில்கூட மன்னார் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாதநிலை காணப்படுகிறது. (படையினர் அனுமதி வழங்குவதில்லை). முகாம்களில் சுகாதாரநிலைகூட நல்லநிலையிலில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது 50 பாம்புகள்வீதம் முகாம்களில் அடித்துக்கொல்லப்படுகின்றன.

உங்களது கருத்துப்படி அரசு இவ்வாறு முகாம்களை அமைப்பதன் நோக்கமென்ன?

இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முகாம்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கின்றனர். புதிய முகாம்களை ஆடி மாத்திலே அமைத்தனர். ஐக்கிய நாடுகளின் பிரசுரிக்கப்படாத அறிக்கையொன்றில் குறிப்பிட்டதற்கிணங்க அரசு தொடர்ந்து இவ்வாறான முகாம்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களுண்டென எச்சரித்திருக்கின்றனர். தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் வவுனியாவிலுங்கூட இவ்வாறான முகாம்கள் அமைப்பதற்குரிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. அரசு வன்னியிலிருக்கும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும்படி அழைத்து அவர்களை இந்த முகாம்களில் முடக்குகின்றனர். இந்த செயற்பாடு முற்றுமுழுதாகவும் அனைத்துலக மனிதஉரிமைக் கொள்கைகளுக்கெதிரான செயற்பாடாகும். இடம்பெயர்ந்தோர் தாம் விரும்பிய இடத்தில் வாழ உரிமையுடையவர்கள். அவர்கள் தமது குடும்பங்களுடன் ஒன்றுசேர்ந்து வாழும் உரிமையினை அரசு தடைசெய்துள்ளது. இவர்களுக்கெதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இவர்கள் முகாம்களில் கட்டாயத்தின் பேரில் வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலுள்ளவர்களின் சில பெற்றோர்கள் மன்னாரில் வாழ்கின்றனர். இருப்பினும் முகாமின் ஆதரவைத்தேடிவந்த மகன் தனது தாயைப்பார்க்கச் செல்லமுடியாத நிலையிலிருக்கின்றனர். இந்நிலை வெளியுலகிற்குத் தெரிவதில்லை. (அறிக்கையிடப்படுவதில்லை) முகாம்களினுள் சமூகசேவகர்களும், மதத்தலைவர்களும் மட்டும் தான் உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அரசு இந்நிலைமையினை உலகத்திற்கு மறைக்க பெரிதும் முயற்சிக்கின்றது.

கலந்துரையாடல் - தாரா சிறீராம்


No comments: